Jan 8, 2016

பெற்றோர்களுக்காக...

நெடுநாட்களாகவே எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டிருப்பது. தெய்வலோகத்தில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் தேவதைகளும், தேவர்களும் வழி தவறி பூமியில் பிறந்த குழந்தைகளைத் தான் நாம் ‘ஆட்டிசம்’ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்கிறோமோ என்ற எண்ண மயக்கம் எனக்கு எப்போதுமே இருக்கிறது. ஏனெனில், வானுலக தேவர்களும், தேவதைகளும் எந்தவித கவலைகளும் இல்லாமல் மற்றவர் துன்பத்தில் மகிழாமல் நிறைவுடன் இருப்பார்கள் என்று நிறைய கதைகளில் கேட்டிருக்கிறேன். அவர்களைப் போன்றவர்களே இந்தக் குழந்தைகளும் என்பது என் எண்ணம். ஏனெனில், இக்குழந்தைகள் எந்தவித கவலைகளும் இல்லாமல், இந்த அவசர இயந்திர உலகில் தங்களைச் சிறைவைத்துக் கொள்ளாமல் அவர்களுக்கென்று ஒரு தனி உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அங்கு வருத்தம் என்பதே கிடையாது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றியும் கவலைப்பட வேண்டியதும் இல்லை.



திடீரென்று எதற்காக இப்போது ஆட்டிசம் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றி இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? இன்று அவள் விகடனில் வெளிவந்த ‘அன்பு அப்பா பிரிதிவிராஜ்’ எனும் தலைப்பில் ஆட்டிசம் பற்றிய சிறு கட்டுரை ஒன்றை எதிர்பாராமல் வாட்சாப்பில் வாசிக்க நேர்ந்தது. வாசித்ததும் ஆட்டிசம் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது.

எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்பவர். பணி நிமித்தமாக இரவு கூட அவரைத் தொந்தரவு செய்திருக்கிறேன், கோபம் கொள்ளாமல் வழிநடத்தியிருக்கிறார். அடுத்த மாதம் செய்ய வேண்டிய பணியை ஒரு மாதம் முன்னரே ஞாபகப்படுத்திவிடுவார். எப்போதுமே பணியை பெரும் உற்சாகத்துடனும், சிரித்த முகத்துடனும் செய்துகொண்டிருப்பவர். சில நாட்களில் அவரைத் தொடர்பு கொள்ளும்போது, “மருத்துவமனையில் இருக்கிறேன். அப்புறம் கூப்பிடுறேன்” எனக் கூறி தொடர்பைத் துண்டித்துவிடுவார். குறிப்பிட்டதைப் போன்றே மறக்காமல் மீண்டும் அழைத்துப் பேசுவார். திடீரென்று ஒரு நாள் ஒரு வார விடுமுறை என்று கிளம்பிச் சென்றார். ஊருக்குச் சென்றாலும் அந்த வாரத்தில் செய்ய வேண்டிய பணிகளை செய்தாகிவிட்டதா என்று அழைத்து உறுதி செய்துகொள்வார்.

மற்ற நண்பர்களிடம் விசாரித்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. அவரது மகளுக்கு ஆட்டிசம் என்ற குறைபாடு இருக்கிறது என்று. எத்தனையோ நாள் அவரது மகளைப் பற்றி அவரிடம் விசாரிக்கலாம் என்று முயற்சித்திருக்கிறேன். ஆனால், அதைப்பற்றி அவரிடம் பேசுவது சரியா என்ற தயக்கத்துடனே விசாரிக்காமல் விட்டிருக்கிறேன். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்துக்கொண்டு அவரால் எப்படி பணியில் இப்படி கவனம் செலுத்த முடிகிறது?’ என்று பல நாட்கள் பிரமிப்புடன் சிந்தித்ததுண்டு.

நெடும் முயற்சிக்குப் பிறகு தயக்கத்தை விட்டு ஒருநாள் அவரிடம் அவரது குழந்தையைப் பற்றி விசாரித்தேன். மருத்துவர்கள் ஆட்டிசம் இல்லை. இது உடலிலும், மனதிலும் ஏற்பட்டிருக்கும் ஒருவிதக் குறைபாடு என்று கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து மருத்துவம் அளித்தால் இந்தப் பிரச்சனை சரியாகிவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார்களாம். அப்போதிலிருந்து குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை செய்துகொண்டு இருக்கிறார். இப்போது அக்குழந்தைக்கு எட்டு வயதாகிறது. இன்னும் மருத்துவத்தை கேரளா, சென்னை என்று தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார். அவரது வருமானத்தையும் மீறி சிகிச்சையை தொடர்ந்துகொண்டிருக்கிறார். இப்போது குழந்தை தி - நகரில் பெரிய பள்ளி ஒன்றில் படிக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் பள்ளி முடித்துவிட்டு திரும்பி வந்து குழந்தை கேட்கும் சில கேள்விகள் மற்றும் இவரது கேள்விக்கு குழந்தை அளிக்கும் பதிலைக் கேட்டு பெரும் ஆச்சர்யத்திலும், மகிழ்ச்சியிலும் திளைப்பதாகக் கூறுகிறார். ஏதாவது புது விஷயத்தை குழந்தை பேசினாலோ அல்லது செய்தாலோ தான் ஆச்சர்யத்தில் திளைப்பதாக கூறுகிறார். “தான் இறப்பதற்குள் குழந்தையின் நிலை நிச்சயம் சரியாகிவிடும்” எனும் நம்பிக்கையில் சிகிச்சையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

“அப்படி சரியாகிவிட்டால் அதுவே எனது பாக்கியம். என் குழந்தையின் எதிர்காலத்தைத் தவிர வேறு எந்த மகிழ்ச்சியும் எனக்கு இல்லை” என்று அவரும் அவரது மனைவியும் கூறுகிறார்கள்.

‘குழந்தையின் மருத்துவச் செலவுக்கு இருவரும் பணிக்குச் சென்றுவிடுவதால் குழந்தையைப் பத்திரமாக பள்ளிக்கு அழைத்து சென்று திரும்பி அழைத்துவரக் கூட உதவிக்கு ஆள் கிடைக்கவில்லை’ என்பதுதான் அவரது வருத்தமாக இருக்கிறது. மற்றபடி எப்போதுமே அதே சிரித்த முகத்துடனும், அர்பணிப்பு உணர்வுடனும் அவரது பணியை செய்துகொண்டிருக்கிறார். அந்த சிரிப்பிற்குள் இப்படியொரு வலி இருக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை.

இவரைப்போன்றே நம்மைச் சுற்றிலும் பல பெற்றோர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எனது கனடா தோழியின் மகனுக்கும் இதே போன்றதொரு பிரச்சனை. ஆனாலும், அவர்கள் நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி பயனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எதற்கு எதற்கோ நாம் நமது ஆதரவையும், அன்பையும் தெரிவிக்கிறோம். நம்முடனே வசிக்கும் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கும், இவர்களை வளர்க்கும் பெற்றோர்களுக்கும் நமது அன்பையும், உதவிக்கரத்தையும் நீட்டுவோமே...

உதவிக்கரம் என்றால் அன்பான அரவணைப்பு, ஆறுதலான சில வார்த்தைகள். அவ்வளவுதான். கடவுளின் அருளினால் விரைவில் அக்குழந்தைகள் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

3 comments:

  1. உங்கள் நண்பரின் மகள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  2. ஆட்டிசம் ஒரு நோயாய் கொள்ளாமல் ஒரு குணாதசியம் என்ற நோக்கில் அணுகினால் நலமாய் இருக்கும் அவர்கள் இயல்பில், வாழ்வியல் நடைமுறைகள் மட்டும் கற்றுக் கொடுத்தால் போதுமானது என்பது என் கருத்து.. ஏனெனில் அவர்கள் ஏதாவதொன்றில் திறமைசாலிகளாயும் பலர் இருப்பர்...

    ReplyDelete
  3. ஆமாம் வெற்றி, எழில் சொல்வது போல் அவர்களுக்குச் சிறப்பாக ஒரு திறமை இருக்கும்...அதைக் கண்டுபிடித்துத் தட்டிக்கொடுத்து ஆதரவாக இருந்தால் அவர்களும் நல்லபடியாக இருப்பார்கள். உங்கள் நண்பர்களின் பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...