Jan 17, 2016

பயணங்கள் முடிவதில்லை...

தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அக்கா'வின் பயணம் குறித்த கேள்விகளுக்கு பதில்கள்...
1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
இரயில் பயணம் என்றாலே ஏனோ எனக்கு ஆர்வம் இருப்பதில்லை. பெரும்பாலும் இரயில் பயணங்களை தவிர்த்து பேருந்தில் தான் பயணம் செய்வேன். இரயிலில் பயணம் செய்வது பேரின்பம் தான். ஆனால், சிக்னல்களில் நிற்கும் சில நிமிடங்கள் எனக்கு பல மணி நேரங்களாக நீண்டு என்னை வதைப்பதுண்டு. எனக்கு எப்போதுமே காத்திருக்கப் பிடிக்காது. குறிப்பாக இரயில் மற்றும் பேருந்திற்காக. ஓரிடத்தில் நிற்காமல் எப்போதுமே நகர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இந்த வகையில் தவிர்க்க முடியாத சமயங்களில் மட்டுமே இரயில் பயணத்தைத் தேர்ந்தெடுப்பேன். எனக்கு நினைவில் தெரிந்த முதல் இரயில் பயணம் கல்லூரி காலத்தில்  பள்ளித் தோழியுடன் திருச்சியிலிருந்து அரியலூர் வந்த பயணம் தான். அதிலும் தோழியின் தம்பியும் உடன் வந்ததாலோ  என்னமோ அந்தப் பயணம் பெரிய அளவில் குதூகலத்தை ஏற்படுத்தவில்லை.

வாதாபி


2. மறக்கமுடியாத பயணம் எது?
மறக்க முடியாத பயணம் என்று இரண்டைக் குறிப்பிடுவேன். 
ஒன்று கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போது தனி ஒருவனாக உத்ராகான்ட் தேராதூன் வரை மேற்கொண்ட பயணம். இந்தியாவின் தென் கோடியிலிருந்து இமயத்தின் அடிவாரம் வரை கிட்டத்தட்ட 2750 கி.மீ நீண்ட நெடும் பயணம் அது. ஐந்து மாநிலம், ஒரு யூனியன் பிரதேசத்தைக் கடந்து செல்லவேண்டும். ஹிந்தி தெரியாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் (அப்போது  இதுவும் அரைகுறை) தான். தமிழகம் விட்டு வெளியேறிய முதல் பயணம் அது. தேராதூனை  அடைந்த பிறகு அங்கு பிராஜெக்ட் மையத்தில் இரண்டு தோழிகளைப் பிடித்துக் கொண்டேன். மினாஸ் மற்றும் மஞ்சு, இவர்களுடன் அபிஷேக். தேராதூனில் எங்கே சென்றாலும் அபிசேக்கின்  ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு மஞ்சுவை பின்னால் அமரவைத்து புறப்பட்டுவிடுவேன். மஞ்சு இருக்கும் வரை எனக்கு மொழிப் பிரச்சனை வரவில்லை. முப்பது நாட்கள் அங்கு இருந்தேன். ஒவ்வொரு வாரத்தின் விடுமுறையிலும் வெளியே கிளம்பி விடுவோம். முசூரி, மான் பூங்கா, கப்டேஷ்வர் கோயில், பௌத்தக் கோயில்கள் என்று லோக்கலில் சுத்தாத இடம் இல்லை. இதையும் தவிர ரிஷிகேஷ் கங்கை நதியில் ரிவர் ரப்டிங் செய்தது மறக்க முடியாத திரில் அனுபவம். வாழ்வில் இப்போது நினைத்தாலும் பெரும் குதூகலத்தை அளிக்கும் பயணம் சாளையக்குறிச்சி  - டேராதூன்  பயணம்.
தேராதூன் பௌத்த விகார்



பௌத்த விகார் ஓவியம்
கல்லூரி முடித்தபிறகு குஜராத்தின் ஜாம் நகர் ரிலையன்ஸ் கம்பனியிலிருந்து இண்டர்வியூ வந்திருந்தது. பயணச் செலவிற்கு கையில் காசு இல்லை. 10000 ரூபாயை வட்டிக்கு வாங்கிக்கொண்டு எதைப் பற்றியும் நினைக்காமல் புறப்பட்டுவிட்டேன். குஜராத்தின் அகமதாபாத் பிறகு அங்கிருந்து ஜாம் நகர் என்று நீண்ட பயணம். எனக்கு தெரியாத ஹிந்தி, தடுமாற்றமான எனது பேச்சு ஆகியவற்றினால் நேர்முகத்தேர்வில் தோற்றுப் போனேன். அது எனக்கு நல்ல அனுபவம் என்று நேர்முகத்தேர்வு பற்றி எந்தவித கவலையும் படாமல் ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்த சமயம். அம்மா அழைத்தார்கள், நேர்முகத் தேர்வில் தோற்றுப்போனதைப் பற்றி அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த போது ஜாம்நகரின் பேருந்து நிறுத்தத்திலேயே அழுது விட்டேன். கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு கண்ணீர் பெருக்கெடுத்த சமயம் அது. மறக்கமுடியாத அனுபவம் அது.              

3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
பெரும்பாலும் தனியாக பயணிப்பதையே விரும்புவன் நான். பலருடன் பயணிக்கும்போது சுதந்திரம் இல்லாததைப் போன்று உணர்வேன். நகர வேண்டுமாலும் பிறருக்காக காத்திருப்பது எரிச்சலை வரவழைக்கும். நமக்கு பிடித்தது, நம்முடன் வரும் குழுவினருக்கு பிடிக்காது. அவர்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்காமல் போகலாம். பெரும்பாலும், பயணத்தின் போது பிறரை சார்ந்திருப்பதை நான் விரும்பமாட்டேன். செலவுக்கு பணம், மாற்று உடை இது போதும் எனக்கு. தனியாக செல்வதில் இருக்கும் ஒரே சிரமம் என்ன என்றால் போட்டோ எடுக்க முடியாது அவ்வளவுதான். செல்பி  மட்டுமே எடுக்க முடியும். இதுவரை தோழிகளுடன் எங்கும் பயணித்ததில்லை. அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று அனுபவித்ததில்லை.

ரிஷிகேஷ்

4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?
பெரும்பாலும் ரஹ்மான் மற்றும் இளையராஜா. இப்போதெல்லாம் செவுட்டு மெசினை காதில் மாட்டிக்கொண்டு திரிவதை விட மற்றவர்கள் பேசுவதைக் கேட்கத்தான் பிடிக்கிறது. சூழலியல் சத்தம் சமீப காலங்களாக என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.

5. விருப்பமான பயண நேரம்?
பகல் பயணத்தைவிட இரவுப் பயணம் தான் எனக்கு விருப்பம். நம்முடனே பயணிக்கும் நிலா, நட்சத்திரம், கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை வெளிச்சத்தின் சுவடே தெரியாத அமாவாசை இருட்டு போன்ற சமயங்களில் செய்யும் பயணம் பெரும் குதூகலத்தை அளித்துவிடும்.

6. விருப்பமான பயணத்துணை.
கேர்ல்  பிரண்ட் உடன் வரும் பயணம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், இதுவரை தனிப் பயணம் தான்.

7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

கையில் எது கிடைத்தாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டே படிக்கத் தொடங்கிவிடுவேன்...

8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
லாங் பைக் டிரைவ் அல்லது அலையே இல்லாத பெரும் அணைக்கட்டு நீர்த் தேக்கத்தில் தனியாக செல்லும் பரிசல் பயணம்...

9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பெண்கள் மனதை ஆக்கிரமித்ததைப் போன்றே பாடல்களும் மாறி மாறி ஆக்கிரமித்ததுண்டு. சமீபமாக கோச்சடையான் படத்தின் 'இதயம்... இதயம்...' வாலி படத்தின் 'வானில் காயுதே...' பாடல்களை முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறேன்.

10. கனவுப் பயணம் ஏதாவது?
உலகம் முழுவதும் இயற்கையும், மனிதனும் செய்திருக்கும் செயற்கரிய இடங்களை துணையுடன் சுற்றிப் பார்த்துவிட வேண்டும்.

கடற்கரை விஜயன் துரைராஜ், கரை சேரா அலை அரசன், ப்ரியா ஆகிய மூவரையும் அழைக்கிறேன்... மேலும், விருப்பமுள்ளவர்கள் இந்தக் கேள்விகளுக்கான பதிலை எழுதித் தொடரலாம்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

5 comments:

  1. இரவு பயணத்தை தவிர வேறு என்ன பதிலும் எனக்கும் உங்களுக்கும் ஒத்துபோகவில்லை என்றாலும், மிக சுவாரஸ்யமான சுற்றுலா சென்று வந்த நிறைவு உங்கள் பதிவு படித்து.பயணத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான பதில்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. 2750 கி.மீ பயணம் - ஆத்தாடி...!

    ReplyDelete
  4. மறக்க முடியாத பயண அனுபவங்கள் த்ரில்லாக இருக்கிறதே. நான் 2000+ மைல்கல் காரில் போய்வந்தேனே :-)
    Girl friend, தோழினுகிட்டு.. ஒழுங்கா வேலையைப் பாருங்க, அம்மாகிட்ட சொல்லிடுறேன், ஆறேழு வருடங்கள் கழித்துப் பெண் பாருங்கள் என்று :-)

    பதில்களும் படங்களும் நன்று

    ReplyDelete
  5. சூப்பர் வெற்றி! சுவாரஸ்யம்தான். ரிஷிகேஷ் ரிவர் ராஃப்டிங்க் போயிருக்கின்றீர்களா! ஹை சூப்பர்! நானும் போயிருக்கின்றேன். ஆனால் ரிஷிகேஷில் இல்லை. பியாஸ் நதியில். என்ன ஒரு திரில் இல்லையா....

    ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க வெற்றி.

    கீதா

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...